இது பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாத இதழ்



சனி, நவம்பர் 20, 2010

இந்தியக் கல்வி வரலாறு

1. பிராமணக் கல்வி முறையும், பௌத்தக் கல்வி முறையும்

ம்  நாட்டில் 54 % மக்கள் 25 வயதுக்குட்பட்டோரே எனில், நம் நாடு இளைஞர்களின் நாடு என கூறலாம். ஆனால், இந்த இளைஞர்களின் நாட்டில் தான் உலகிலேயே அதிக கல்வி அறிவில்லாத மக்கள் வசிக்கின்றனர். இந்தியாவை விட மக்கள் தொகையில் பெரிய நாடான சீனா மற்றும் பல வறுமை தோய்ந்த நாடுகளில் 100 % கல்வியறிவை பலர் பத்தாண்டுகளுக்கு முன்னரே எட்டி விட்டனர். 63 ஆண்டுகளுக்கு முன்பே சுதந்திரம் வாங்கிவிட்டோம் என்று கூறிக்கொள்கிற நம் நாட்டிலோ, இன்றும் மூன்றில் இரண்டு பங்கு கூட கற்றவர்கள் என்ற நிலையை எட்ட முடியாமல் இருப்பது மிகவும் கேவலமானது, வெட்கப்படவேண்டியது இந்திய அரசின் அக்கறையற்ற தன்மைக்கு இது ஒரு நல்ல சான்று. உண்மையில் அரசால் அனைவருக்கும் கல்வி கொடுக்க முடியாத ஒரு மிகப்பெரிய கடினமான பணியா என்றால் இல்லை என்பதுதான் அதிர்ச்சி அளிக்கும் விஷயம். இந்திய ஆளும் வர்க்கங்களின் தலைமைப் பாத்திரத்தில் இருக்கும் மேல்சாதிக்காரர்கள் அனை வருக்கும் கட்டாய கல்வியை வழங்க மறுத்து வருகின்றனர். ஒடுக்கப்பட்ட மக்களின் வளர்ச்சிக்கு ஒரே கருவியான கல்வியை பெற நாம் அனைவரும் போராடிக் கொண்டிருக்கின்ற இந்த நிலையில் நாம் எல்லோரும் இந்திய கல்வி வரலாறு பற்றிய ஒரு அடிப்படை புரிதல் ஏற்படுத்த வேண்டுமென்ற விருப்பத்தின் விளைவே இத்தொடர் கட்டுரை. ஏனெனில் வரலாற்றை அறியாதவன் வரலாற்றை படைக்க முடியாது. எனவே அனைவருக்கும் கட்டாய, இலவச, தாய்மொழிவழிக் கல்வி என்ற நிலையை ஏற்படுத்த அனைவரும் ஒன்று திரண்டு போராடி அறிவார்ந்த சமூகத்தைப் படைப்போம். அப்போராட்டத்திற்கு வித்தாக இந்திய கல்வி கல்வி வரலாறு பற்றி பார்ப்போம்.



கல்வி என்பதன் உள்ளடக்கம் பல கூறுகளைக் கொண்டது. படிப்பு வெறும் பிழைப்பிற்கே என்ற கருத்து ஒடுக்கும் வர்க்கங்களின் கருத்தே. ஒவ்வொரு மாணவரின் அகத்தினுள் புதையுண்டிருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வருவதே கல்வியின் நோக்கமாகும். தற்காலத்தில் நிலவும் பிழைப்பையே குறிக்கோளாகக் கொண்ட படிப்பை நிறுத்தி, விலக்க வேண்டும். சமுதாயத்தின் அனைத்துத் தளங்களிலும், நிலைகளிலும், எல்லா வளங்களையும் அளிக்க வல்லதான கல்வியை மக்கள் அனைவருக்கும் பெற்றிட வழி செய்ய வேண்டும். இப்பொழுது இந்திய துணைக் கண்டத்தில் நிலவிய கல்வி முறைகளை பற்றி பார்ப்போம்.

ஆதிகாலக் கல்விமுறை:

குடும்பத்திலும், நெருங்கி இணைந்திருந்த சமுதாயத்திலும் அன்றாடம் நிகழும் செயல்களில் பங்கு கொண்டு நேர் அனுபவங்களைப் பெறுவதன் மூலம் அக்கால குழந்தைகள் தமக்குத் தேவைப்படும் இன்றியமையாத திறன்களையும் பழக்கங்களையும் கற்றனர். உடனடியாக எழக்கூடிய நடைமுறைப் பயன்கள் கல்வியின் இலக்குகளாக இருந்தன. பெற்றோர்களும் சமுதாயத்தினரும் ஆசிரியர்கள் என்ற நிலையில் காணப்பட்டனர். சமுதாய வாழ்க்கை, பள்ளி வாழ்க்கையாக இருந்தது. அவர்கள் கற்க மேற்கொண்ட முறை (Trial and Error Learning) 'முயன்றுத் தவறிக் கற்றல் ' ஆசிரியர்கள் எனப்படும் தனிப்பிரிவினர்  பண்டைய சமூகங்களின் தொடக்க நிலையில் காணப்படவில்லை. பெண்கள் ஆட்சி செய்யும் தாய்வழிச் சமூகமாக இருந்தபடியால் பெண்களும் கற்றனர்.

குருகுலக் கல்வி முறை (அ) பிராமணக் கல்வி முறை:

ஆரியர்கள் கி.மு.1500 முதல் மத்திய ஐரோப்பாவில் இருந்து சாரை சாரையாக கைபர், போலன் கணவாய் வழியாக இந்தியத் துணைக் கண்டத்திற்கு வந்து கொண்டிருந்தனர். இங்கு ஏற்பட்டிருந்த வேலைப் பிரிவினை பிற்காலத்தில் வர்ணங்களாக மாற்றம் அடைந்து பிறகு அதனை பார்ப்பனர்கள் திடப்படுத்தினார்கள். வேதங்களை அறிவதே கல்வியாக இருந்தது. வேதங்களில் ரிக்வேதமே பழையது. ரிக் வேதத்தை மொழி பெயர்த்தவர்களில் மிக முக்கியமானவர் மேக்ஸ் முல்லர். இவரது கூற்றுப்படி, வேதம் என்றால் ஆரியருக்கும் இந்நாட்டின் பு+ர்வகுடியினருக்கும் நடந்த சண்டையின் வர்ணனையே ஆகும். ஆரிய மொழிக்கு எழுத்து வடிவம் இல்லை என்பதால் அவர்கள் மனிதர்களிடையே வாய்மொழியாக வேதத்தைப் பரிமாறிக் கொண்டனர். இக்கல்வி முறையில் ஆசிரியரின் இல்லத்தில் தங்கி ஆசிரியருக்கு சேவை செய்து, கல்வி கற்பதுதான் போதிக்கப்பட்டது. மாணவர்கள் தமது பணியுடன் தொடர்புடைய வேதப் பகுதிகளை மட்டும் கற்றனர். ஆசிரியர் கூறுவதை மாணவர்கள் திரும்பத் திரும்பக் கூறி, அதனை மனப்பாடம் செய்வது கற்றல் முறையாகக் காணப்பட்டது. மாணவர்களது உச்சரிப்பில் ஆசிரியர் பெருங்கவனம் செலுத்தினார். இந்த மாணவப் பருவம் சராசரியாக 12 ஆண்டுகள் நீடித்தது. ஆசிரியரது சொல்லுக்கும், கட்டளைக்கும்  உடனடியாகக் கீழ்ப்படிதல் மாணவர்களிடம் கட்டாயமாக்கப்பட்டது. ஆசிரியருக்கு பணிசெய்து அவரது ஓய்வு நேரத்தில் அவரிடமிருந்து மாணவர்கள் பலவற்றைக் கற்பது என்பது குருகுல முறையில் இயல்பாகும். சாதியப் படிநிலை இறுகிய பின்னர், பார்ப்பனர்கள் கல்வியை தங்களுக்கே ஏகபோகமாக அமைத்துக் கொண்டார்கள். சத்திரியரும், வைசியரும் தங்களின் வசதிக்கேற்ப கல்வி பெற அனுமதிக்கப்பட்டனர். இது வரை கல்வி பெற்ற சூத்திரர்களை கல்வியிலிருந்து முற்றாக வெளியேற்றினர். இதற்கு சார்பாக வேத சாஸ்திரங்களையும் எழுதிக்கொண்டார்கள். பிராமணர் இந்த மனு ஸ்மிருதியைப் படிக்கலாம், மற்ற சாதியாருக்கு (வருணத்தாருக்கு) ஓதுவிக்கக்கூடாது என மனுதர்மத்தின் அத்தியாயம்-1 பாடல் சுலோகம்-103-ல் சொல்லப்பட்டுள்ளது. 

பின்னாளில் மனுதர்மத்தில், 'படிக்கும் சூத்திரனின் நாவை அறு, பிறர் படிப்பதை கேட்கும் சூத்திரனின் காதில் கொதிக்கும் எண்ணெயையோ, ஈயத்தையோ ஊற்ற வேண்டும்” என மேல் சாதி வெறியில், சட்டமாக இயற்றிக் கொண்டனர். இதன் இலக்கியச் சான்றாக, தன் முயற்சியால் வில் வித்தை கற்றுக் கொண்ட ஏகலைவனின் கட்டை விரல்  நய வஞ்சகமாக பலி வாங்கப்பட்டதைக் கொள்ளலாம். அதே போல் தவம் செய்ய சூத்திரருக்கு உரிமையில்லை என்று கூறி, இராமன், காட்டில் தவம் செய்து கொண்டிருந்த சம்புகனின் தலையை வெட்டிக்கொன்றது பதிவு செய்யப்பட்டது. பெண்களுக்கு தொடக்கத்தில் கல்வி பெற சமவாய்ப்புகள் அளிக்கப்பட்டன. எனினும் பின்னர் சூத்திரர்களோடு சேர்ந்து சமூகத்தின் ஒட்டுமொத்த பெண்களுக்கும் கல்வி மறுக்கப்பட்டது.

பௌத்த கல்வி முறை:

புத்த மார்க்கம் தோன்றி வளர்ச்சி பெற்றதற்கு பார்ப்பன இந்து சமயத்தின் கொடுமைகளே காரணங்களாகும். இதனால் தான் பல சமூக அறிஞர்கள் புத்த மார்க்கத்தை பார்ப்பன மதத்தில் ஏற்பட்ட புரட்சி என கூறுகின்றனர். வேதங்களின் தெய்வீக அடிப்படைகளையும் யாகத்தில் மிருகங்களை பலியிடுவதையும் பௌத்தர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பிராமணக் கல்வி முறை தனிப்பட்ட மாணவர்களிடம் அதிக கவனம் செலுத்தியது ஆனால் பௌத்த கல்வி முறையில் மாணவர்களைக் குழுக்களாக அமைத்துக் கற்பித்தல் கையாளப்பட்டது. பௌத்தப் பள்ளிகளில், பிராமணப் பள்ளிகளைக் காட்டிலும், குடியாட்சிப் பண்பு பரவிக் காணப்பட்டது.

குரு குலக்கல்வி முறையில் ஆசிரியர் ஓர் எதேச்சதிகாரியைப் போன்று செயல்பட்டார். ஆனால் பௌத்த அசிரியர் அவ்வாறு சர்வாதிகாரி போன்று இல்லாமல், பள்ளிகளின் நிருவாகத்தில் மாணவர்களையும் பங்குபெற வைத்தனர். மேலும் அவர்களது கருத்துக்களுக்கும் மதிப்பு அளிக்கப்பட்டது பௌத்த கல்விமுறையில் தாய்மொழியில் கல்வி பயிற்றுவிக்கப்பட்டது. குருகுல கல்வி முறையில் வட மொழிக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அது போல், தனிப்பட்ட ஆசிரியர்களைக் கொண்டு இயங்கிய குருகுல கல்விக்கு பதில், பௌத்த கல்வி முறையில் விஷாரங்கள் (கல்விக் கூடங்கள்) செயல்பட்டன.

பௌத்தர்கள் காலத்தில்தான் வரலாற்றில் புகழ்பெற்ற நாலந்தா, தக்சசீலம் போன்ற பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டு வந்தன. இன்றைக்கு நாம் பயன்படுத்தும் கல்வி சம்பந்தமான பல சொற்கள், புத்தமார்க்கத்திலிருந்து பெறப்பட்டதே. உதாரணமாக, பள்ளிக்கூடம் என்ற வார்த்தையைப் பகுத்தால் பள்ளி + கூடம். அதாவது, தூங்கும் இடம், ஓய்வெடுக்கும் இடமென பொருள்படும். இப்பதம் ஏன் கல்வி நிலையத்திற்கு வந்தது எனப் பார்க்கும் போது, பௌத்தர்கள், அனைத்து மக்களும் கல்வி கற்க வேண்டுமென என பிரச்சாரம் செய்து வந்தனர். இது பார்ப்பன மதத்திற்கு நேர் எதிரானதாகும். மக்கள் புத்ததுறவிகள் ஓய்வெடுக்கும், பள்ளி கொள்ளும் இடங்களுக்கு சென்று அவர்களின் சொற்பொழிவினால், போதனைகளால் அறிவுத் தெளிவு பெற்றதன் காரணமாக அறிவு பெறும் இடமெல்லாம் புத்த பிக்குகளின் பள்ளி கொள்ளும் இடமானதால் காலப்போக்கில் கல்வி நிலையத்திற்கு பள்ளிக்கூடம் என பெயர் நிலைத்து விட்டது.

புஸ்யமித்திர சுங்கன் என்ற பார்ப்பனன், அரசர் இரண்டாம் அசோகனின் (அசோகனின் பேரன்) படைத்தளபதியாக இருந்தவன். அந்த புஸ்யமித்திர சுங்கன் அரசனையே கொன்று, அரசாட்சியைக் கைப்பற்றினான். பின்னர் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பரவியிருந்த புத்த மார்க்கத்தையும், புத்த பிக்குகளையும் அழித்தொழிக்க ஆணையிட்டான். இதனால் புத்த மார்க்கம் இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து மறையத் தொடங்கியது. புத்த கல்வி முறை மறைந்து, மீண்டும் பார்ப்பனக் கல்வி முறை முன்பிருந்த வீரியத்துடன் மக்களை நசுக்க வந்தது. சாதிய ஒடுக்குமுறை கடினமாக்கப்பட்டது. இந்தியத் துணைக்கண்டத்து மக்களின் இருண்ட காலம் சுங்க அரசனின் மூலம் தொடங்கியது.

(தொடரும்...)
- இராஜேந்திர பிரசாத்,
சென்னைப் பல்கழைக் கழகம்

இந்த மாத இதழ் முகப்பு

இந்த மாத இதழ் முகப்பு
ஜூலை 2014